திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.88 திருமருகல் - திருக்குறுந்தொகை |
பெருக லாந்தவம் பேதைமை தீரலாந்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
|
1 |
பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்தரு கற்பெரு மான்றிரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.
|
2 |
சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம்
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.
|
3 |
ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப்
பாது காத்துப் பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
|
4 |
இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்கெரு மான்றிறம்
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே.
|
5 |
சங்கு சோரக் கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு கற்கெரு மான்வரும்
அங்க வீதி அருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.
|
6 |
காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.
|
7 |
நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாடம் நீள்மரு கற்கெரு மான்வரிற்
கூடு நீயென்று கூட லிழைக்குமே.
|
8 |
கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்கெரு மானென்று
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.
|
9 |
ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச்
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்கெரு மான்றிறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |